கோவை பெண்கள் தான் டார்க்கெட்… மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைவரிசை ; 3 கேரள இளைஞர்களை மடக்கி பிடித்த தமிழக போலீஸ்…!!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 5:45 pm
Quick Share

கோவையில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் சிறுவானி நகர் மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 12ம் தேதி காலை 6.15 மணியளவில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. இதே நாளில் மதுக்கரையிலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இந்த மூன்று செயின் பறிப்பு சம்பவங்ளை ஒரே குற்றவாளிகள் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து, இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக குனியமுத்தூர் குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மருதாம்பால், பாஸ்கரன், சிலம்பரசன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடங்களில் கிடைத்த சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 3 பேர் எனவும், அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

கடந்த 22ம் தேதி குனியமுத்தூர் மின்நகர் பகுதியில் மீண்டும் இவர்கள் மேலும் ஒரு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்றனர். இவர்கள் மீண்டும் கோவை மாநகர பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குனியமுத்தூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் காலை 05 மணி முதல் 09 மணி வரை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று(28ம் தேதி) காலை 7.45 மணியளவில் டி4 குனியமுத்தூர் குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் குனியமுத்தூர் ககுணாபுரம் மேற்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் போலீஸை பார்த்ததும் வண்டியை திருப்பி தப்பியோட முயன்றனர். இவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரனை செய்தனர். அதில், இவர்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ரிசப் (27) மற்றும் முகமது யாசின்(20) என்பதும் இருவரும் நேற்று(28ம் தேதி) குனியமுத்தூரில் ஒரு செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பித்து வந்தததும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது இவர்கள்தான் என்பதும், இவர்களுடைய கூட்டாளி ராபின்(20) மதுக்கரை பகுதியில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மதுக்கரை மரப்பாலம் அருகே ராபினை கைது செய்து, தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ரிசப் முகமது யாசின், ராபின் மற்றும் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இவர்களிடம் இருந்து 166 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Views: - 247

0

0