செங்கல்பட்டில் உலா வந்த SPIDER WOMAN! பந்தயத்திற்காக விபரீத முயற்சி.!!
11 August 2020, 5:02 pmசெங்கல்பட்டு : பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியின் வெளிபுற சுவற்றின் பக்கவாட்டில் பயமின்றி நடந்த சிறுமியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) நாவலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஏகாட்டூரில் மிக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 29 வது மாடியின் வெளிப்புறச் சுவற்றை பிடித்து சிறுமி ஒருவர் உயிரை பணையம் வைத்து நடந்து செல்லும் காட்சியை அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது செல்போனில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஸ்பைடர் மேன் போல அந்த சிறுமி 29வது மாடியின் வெளிப்புற பக்கவாட்டு சுவற்றில் அச்சமில்லாமல் நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து மாமல்லபுரம் ஏ.எஸ்.பி மற்றும் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று விசாரணை செய்தனர்.
அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியினரின் மகள்தான் உயிரை பணையம் வைத்து 29வது மாடியின் பக்கவாட்டில் நடந்து சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த தம்பதியை நேரில் சந்தித்து காவல்துறை அதிகாரிகள் பேசும்போது அவர்கள் பெயரை கூறவும், அவரது மகன், மகள் பெயரை கூறவும் விருப்பமில்லை என போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதை தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். 15 வயது சிறுமி தன்னுடைய உயிரை பணயம்வைத்து 29வது மாடியின் பக்கவாட்டில் நடந்து சென்றது குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர் .
15 வயது சிறுமி தன் அண்ணனிடம் பந்தையம் கட்டியதால் பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று அபாயகரமான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.