தோழிகளுடன் பீஸ்ட் படத்திற்கு சென்ற விஜய் ரசிகர்… கார் மரத்தில் மோதிய விபத்தில் பரிதாப பலி..! கோவையில் சோகம்..!!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 4:59 pm
Quick Share

கோவை: நஞ்சுண்டாபுரம் அருகே இன்று அதிகாலை கார் மரத்தில் மோதிய விபத்தில் தோழிகளுடன் பீஸ்ட் படம் பார்க்கச் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் கவுசிக் (21). கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய இவர், தற்போது சொந்தமாக தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பிரித்வி (20), கௌசிக்-ன் உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா. ஆகிய 4 பேரும் இன்று அதிகாலை காரில் சுங்கம் பைபாஸ் வழியாக உக்கடம் நோக்கிச் சென்றனர்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், வாலாங்குளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த மரத்திலும் மோதி கவிழ்ந்தது. இதில், காரின் இடிபாடுகளுக்குள் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். கௌசிக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்ற மூன்று பேரும் காயமடைந்தனர். இதையடுத்து சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் பலியான கௌசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் ரசிகரான கௌசிக் இன்று ரிலீசான பீஸ்ட் படத்தை பார்க்க அதிகாலை சிறப்பு காட்சிக்காக தனது நண்பர் மற்றும் தோழிகளுடன் சென்றபோது விபத்து நடைபெற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 568

1

0