ஒன்றிய அரசுக்கு பயமே அவங்க மேல மட்டும் தான்… யாத்திரை மூலம் வசூல் மழையில் அண்ணாமலை ; காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 4:12 pm
Quick Share

பாஜக ஒன்றிய அரசு அடிப்படையில் மக்கள் விரோத அரசாங்கமாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் தலைமை வகித்தனர் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் நடக்க வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், நடந்து முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகளில் உள்ள குறைபாடுகளை சீரமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது

கூட்டத்தின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி மற்றும் ஜோதிமணி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது :- வேடசந்தூர் அழகாபுரி அணையில் நீண்ட காலமாக மராமத்து பணிகள் செய்யப்படாமல் இருந்தது தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மராமத்து பணிகள் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக, மழை காலம் நடந்து வருவதால் மழை காலம் முடிந்ததற்கு பிறகு பணிகள் துரிதமாக செய்யப்பட்டு முடிவடையட்டும்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள சாய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அழகாபுரி அணையில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு குழு அமைத்து நேரடியாக ஆய்வு செய்து சாயக் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.

வேடசந்தூர் பகுதியில் சிப்காட் மற்றும் சிட்கோ அமைப்பதற்கு பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மலைகள் உள்ள பகுதிகளை கடந்த ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதை மக்களை திரட்டி போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தி உள்ளோம். இதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் சீரிய முயற்சிக்கு பிறகு அப்பகுதி தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு சிப்காட் சிட்கோ அமைக்க முடியாது. அதை மலைகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

பழனி முதல் பெருமாள் மலை வரை கொடைக்கானல் மலைப்பகுதி 5 1/2 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளதை 7 மீட்டர் ஆகவும், பெருமாள் மலையிலிருந்து வத்தலகுண்டு வரை தற்போது ஏழு மீட்டர் உள்ள சாலையை 10 மீட்டராகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு ரோப்கார் திட்டம் கொண்டு வருவது குறித்து சுற்றுலா துறை அடுத்த மாதம் ஆய்வு செய்யப்பட உள்ளது. கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதி இல்லாத 45 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, அடுத்த மாதம் பணிகள் முடிவடையும்.

பாஜக ஒன்றிய அரசு அடிப்படையில் மக்கள் விரோத அரசாங்கமாக செயல்படுகிறது. மக்களிடம் வாங்கும் வரி திரும்ப மக்களுக்கே வருவதில்லை. 450 ரூபாய்க்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிலிண்டர் விற்பனையானது. தற்போது 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 9 ஆண்டுகளில் 2 1/2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

40 ஆண்டு காலம் இல்லாத வேலைவாய்ப்பு திண்டாட்டம் தற்போது நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் 12 வாரங்கள் வரை சம்பளம் வழங்கப்படாததற்கு காரணம், ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி பணம் ஒதுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அறுபதாயிரம் கோடி ரூபாய் மட்டும் பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். எனவே, சம்பளம் வழங்க போராட வேண்டியது இருக்கிறது.

இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பணம் நிறுத்தப்படுகிறது. அந்த பணம் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்துவதாக கூறுகின்றனர். அவ்வாறு ஒதுக்கப்படும் பணம் விமான நிலையம், தானிய கிடங்கு இவற்றிற்கு அந்த பணம் செல்கிறது. இதற்கெல்லாம் ஒரே ஓனர் அதானி தான்.

மக்களிடம் பெறப்படும் பணம் மீண்டும் மக்களுக்கு கொடுக்காமல் அதானிக்குத்தான் செல்கிறது. நரேந்திர மோடிக்கு எதிராக கூட இந்த நாட்டில் பேசிவிடலாம். ஆனால் அதானிக்கு எதிராக பேசிவிட முடியாது என்ற சூழ்நிலை நிலவுகிறது. மக்களுக்கு விரோதமான முறையில் நரேந்திர மோடி அரசாங்கம் கொள்ளையடித்து வருகிறது.

தேர்தல் பத்திரம் என்று ஒன்று உள்ளது. அவ்வாறு வழங்கப்படும் தேர்தல் பத்திரம், உதாரணத்துக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் அதில் 99 ரூபாய் பாஜகவிற்கு செல்கிறது மீதமுள்ள ஒரு ரூபாய் தான் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கப்படுகிறது. மக்களிடமிருந்து பெறப்படும் பணம் மக்களுக்கு கொடுக்காமல் அதானி போன்றவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு கொடுக்கப்படும் பணம் மீண்டும் தேர்தல் நிதி என்ற பெயரில் பாஜகவிற்கு மட்டும் செல்கிறது. இது போன்ற நூதனக் கொள்கையை பாஜக அரசு செய்து வருகிறது.

மக்கள் மீது கொடூரமான வரி விதிப்பு முறையை பாஜக அரசு விதித்து வருகிறது. இதன் தாக்கம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தெரியவரும். மீண்டும் மோடி வேண்டும் மோடி என கூறி வருகின்றனர். ஆனால், மக்கள் மீண்டும் மோடி வேண்டாம் மோடி என கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜகவை பொறுத்த அளவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை நடத்தி யாத்திரை மூலம் ஒரு வசூலை நடத்தி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வி சந்திக்கும்.

நரேந்திர மோடி அரசு ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றுவதில்லை. எந்த ஒரு திட்டத்தையும் கொடுப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டு, இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்படும். அதில் எந்த மாதிரியான திட்டங்கள் நமக்கு கிடைக்கிறது என்பது தெரிய வந்தது. ஆனால் தற்போது அது மாதிரியான தனிப்பட்ட ரயில்வே துறைக்கு பட்ஜெட் கிடையாது.

ஒன்றிய பாஜக அரசு யாருக்காவது பயந்தது என்றால் அது தமிழ்நாட்டு எம்பிகளுக்கு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. அது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்கள் பேசியதை தொடர்ந்து மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது, என்று தெரிவித்தனர்.

Views: - 163

0

0