செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு : தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேர் மீது பாய்ந்தது வழக்கு!!
4 August 2020, 12:22 pmகொரோனாவுக்கு பலியான ஆற்காடு அரசு மருத்துவமனை செவிலியரின் உடலை நல்லடக்கம் செய்ய தடுத்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனை செவிலியர் அர்ச்சனாவுக்கு காய்ச்சல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துகொண்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடலை சொந்த ஊரான நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அவரது உடலை அடக்கம் செய்ய தி.மு.க., முன்னாள் நகர்மன்ற தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான கிருஷ்ணமூர்த்தி உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். செவிலியர் அர்ச்சனாவின் சடலத்துடன் உறவினர்கள் 2 மணி நேரம் காத்திருந்து, பின்னர் அரசு அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் பொதுமக்கள் உடலை புதைக்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், செவிலியர் உடலை புதைக்க இடையூறு செய்ததாக, தி.மு.க. நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.