சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் குளங்கள் புனரமைக்கும் பணி: கோவை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!!

Author: Aarthi Sivakumar
23 June 2021, 3:20 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள்,
தூய்மைப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள், தூய்மைப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார். பி.என்.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணியாளர்களிடம் அனைவரும் நேரம் தவறாமல் பணிக்கு வருகை வேண்டும். தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களுடைய பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து, சீரநாயக்கன்பாளையம் பாரதி வீதியில் கிளை நூலகம் அருகில் களப்பணியாளர்களிடம் தெரிவிக்கையில், கொரோனா தடுப்புப் பணிகளில் களப்பணியாளர்களின் பணி மிக முக்கியமானதாகும்.

களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல்வெப்பநிலை கண்டறியும் வெப்பமாநியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து அவற்றை கணினி மற்றும் பதிவேடுகளில் பதிவிட வேண்டும்.

பணி மேற்கொள்ளும் போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் குமாரசாமி குளம் மற்றும் செல்வம்பதி குளத்தின் புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வருவதையும், கிருஷ்ணம்பதி குளம் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Views: - 231

0

0