‘போலீஸ்காரர் என்றுகூட பார்க்காம’… மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய சம்பவம்… இரு பெண்கள் கைது..!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 8:36 am
Quick Share

நல்லம்பள்ளி அருகே, நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது பெண்கள் மாட்டுச் சாணத்தை கரைத்து ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள், என்பவருக்கு சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் அக்கா முனியம்மாள், என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை சர்வேயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஹள்ளி வி.ஏ.ஓ., மாதேஷ், சர்வேயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டுகாரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய நேற்று முன்தினம் சென்றனர். இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த பொதுமக்கள் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்ய வந்த சர்வேயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார். இதில், முனியம்மாள் மற்றும் மாதம்மாளை தொப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Views: - 595

0

0