மரித்த மகனின் வாழ்க்கை.. மீண்டும் விதைக்க செய்த தாய் : உடல் உறுப்புகள் பலருக்கு தானம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 9:05 am
Organs Donate - Updatenews360
Quick Share

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிலாதத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் தனது தாயாருடன் குவைத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு இவர் அண்மையில் வந்திருந்தார். திருமணம் ஆகாதவர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தில்லைவிளாகம் பகுதியில் வீரபத்திரன் என்ற நண்பருடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி மோட்டார் பைக் கீழே விழுந்தது. இதில், மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட மணிகண்டன், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நேற்று மூளைச்சாவு அடைந்ததாக குவைத்தில் உள்ள அவரது தாயார் வெற்றிசெல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக புறப்பட்டு நேற்று இரவு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார். மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெளிவாக வெற்றிசெல்வியிடம் விளக்கினர். பின்னர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேஷ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை சென்னையிலிருந்து வந்த மருத்துவக் குழுவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவும் இணைந்து மணிகண்டனின் உடல் உறுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் உறுப்புகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன. சென்னை எம் ஜி எம் மருத்துவ மனைக்கு இதயம், நுரையீரல் தானமாக வழங்கப்பட்டது.

மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு கல்லீரல், மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு இரண்டு கிட்னிகளும் தானமாக வழங்கப்பட்டன திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு கண்கள் தானமாக பெறப்பட்டன.

அகற்றப்பட்ட உறுப்புகள் அனைத்தும் அதற்குரிய பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை செல்ல வேண்டிய இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு எடுத்துச் சென்று அதன் பின்னர் விமானத்தில் சென்னை எடுத்துச் செல்லப்பட்டது.

அகால மரணம் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் தனது மகனை பிரிந்த துக்கத்திலும் மற்றவர்களுக்கு உயிர் கொடுத்து வாழ வேண்டும் என்கின்ற உணர்வோடு உடல் தானம் அளிக்க சம்மதித்த மணிகண்டனின் தாயாருக்கு மருத்துவர்களும் இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் நண்பர்களும் பொதுமக்களும் நன்றியை தனது ஆறுதல் வார்த்தைகளால் தெரிவித்து தேற்றினர்.

Views: - 248

0

0