கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து… 3,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி ; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி..!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 5:03 pm
Quick Share

தருமபுரி அரூர் அருகே தீ விபத்தால் 3500 க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அச்சல்வாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கல்லடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் சசி (வயது 47). இவர் கடந்த 13 வருடங்களாக கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். தகர செட்டு கூரையினால் அமைக்கப்பட்ட கோழிப்பண்ணையில் 3500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சசி இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு வெளியில் எழுந்து வந்து பார்த்த போது, கோழி பண்ணையிலிருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கோழிப்பண்ணையின் அருகே சென்று பார்த்த போது, தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது.

இது குறித்து அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு சசி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கோழிப்பண்ணையில், இருந்த 3500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியாகின. சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை செட்டுகள், ரூ.2 லட்சம் மதிப்பிற்கான கோழிக் குஞ்சுகள் என மொத்தம் ரூ.10 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார். இந்த தீ விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி சசி கூறுகையில், “தனியார் நிறுவனம் மூலம் வாங்கி வளர்க்கப்படும் கோழி குஞ்சுகளுக்கு இதுவரையில் தனியார் நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளுக்கு எந்த ஒரு காப்பீடுகளும் செய்து தருவதில்லை. இதன் காரணமாக இயற்கை சீற்றத்தால் உயிரிழக்கும் கோழிக்குஞ்சுகளுக்கு இதுவரையில் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்க பெறுவதில்லை.

ஆகவே, இத்தொழிலை நம்பி இருக்கும் தங்களுக்கு இது பேரிழப்பாக உள்ளது. ஆகவே, கருணை அடிப்படையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு நிவாரண தொகை வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 288

0

0