மிக்ஸி போட்டாலே இடிந்து விழும் மேற்கூரை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுவன் ; தொகுப்பு வீடுகளை புனரமைக்க கண்ணீர் மல்க கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 11:11 am
Quick Share

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பள்ளி சிறுவன் உயிர் தப்பினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த சுரேஷ் – பாப்பாத்தி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த தம்பதியினரின் மூத்த மகனான ஸ்ரீ தர்ஷன் நேற்று பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கட்டிலில் அமர்ந்து தனது வீட்டு பாடத்தை செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழ, அதை பார்த்து சுதாரித்து கொண்டு வெளியே ஓடிய கனநேரத்தில் சிறுவன் அமர்ந்து இருந்த இடத்தில் மறுபடியும் வீட்டின் மேற்கூரை விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் தப்பினார்.

இது குறித்து அவரது தாயார் பாப்பாத்தி கூறுகையில், “இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஜாதி கலவரத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த அரசு வீடுகளை இழந்த 135க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டி தந்தது.

இந்த நிலையில், அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட அனைத்து வீடுகளும் தற்போது மிகவும் பழுது அடைந்து சேதமாகி உள்ளது. அதனை இடித்து அகற்றி தரவேண்டும் (அ) புரணமைப்பு செய்து தரும்படி அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடத்தில் பல முறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது வரை இந்த இடிந்து விழும் வீட்டில் தான் உள்ளோம். மழைக்காலங்களில் அனைவரின் வீடுகளிலும் மழை நீர் கசிந்து வருகிறது. டிவி, மிக்ஸி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்தும் போது, அதன் அதிர்வை தாங்க முடியாமல், அவ்வப்போது இடிந்து விழுந்து கொண்டே உள்ளது. இன்று மிக்ஸியை ஆன் செய்த போது அந்த அதிர்வை தாங்காத வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இன்று எனது மகனின் உயிர் தப்பியது அதிசயம் தான். இதேபோல் மறுபடியும் நடக்குமோ என தெரியாது. ஆகவே இடியும் நிலையில் உள்ள அனைத்து வீடுகளையும் அப்புறபடுத்தி வீடு கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு முன்வரவேண்டும். தங்களின் உயிர்களை அரசு தான் காப்பாற்ற வேண்டும், என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Views: - 462

0

1