செம்மரம் வெட்ட சென்ற தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம்: செம்மர கடத்தல் புரோக்கர் அதிரடி கைது

Author: Udhayakumar Raman
4 December 2021, 1:56 pm
Quick Share

தருமபுரி: ஆந்திராவில் சட்ட விரோதமாக செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தில் செம்மர கடத்தல் புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மற்றும் சிட்லிங் வட்டாரப் பகுதியிலுள்ள தொழிலாளர்கள் சிலர் அண்மையில் ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டும் பணிக்கு சென்றுள்ளனர். இதில், சித்தேரி மலைப்பகுதி மெதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமன் (40) என்பவரும் சென்றுள்ளார். ஆந்திரா சென்ற இவர் மர்மான முறையில் சித்தேரி பேருந்து நிறுத்தத்தில் கடந்த 27ம் தேதி அன்று இறந்துள்ளார். தொடர்ந்து, ராமனை கிருஷ்ணகிரியில் இருந்து காரில் ஏற்றி வந்த கார் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் அதன் உரிமையாளர் சண்முகம் ஆகியோரை அரூர் போலீஸார் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சித்தேரி அருகேயுள்ள அழகூர் ஜக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செவத்தான் மகன் பாலகிருஷ்ணன் (44) என்பவர், ஆந்திர மாநிலம், கடப்பாவில் தலை இரண்டாக வெட்டி துண்டிக்கப்பட்டு மர்மான முறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த தொழிலாளி பாலகிருஷ்ணனின் சடலம், கோட்டாட்சியர் விசாரணைக்கு பிறகு கடப்பாவில் அடக்கம் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அரூர் அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரகு (28) என்பவர், இடைத்தரகராக செயல்பட்டு சித்தேரி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டும் பணிகளுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஊட்டியில் தலைமறைவாக இருந்த ரகுவை பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து அரூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 247

0

0