வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி… திடீரென ஓடிச்சென்று மாடியில் இருந்து குதித்த போக்சோ குற்றவாளி..!

Author: Babu Lakshmanan
22 March 2024, 2:47 pm
Quick Share

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஏபி நகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 36). இவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்ஸோ வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் இந்த வழக்கு 19ம் தேதி மாலை திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்து ஷாஜகான் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள சிறப்பு போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது நீதிமன்றத்தில் இருந்து வெளியில் ஓடிவந்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் இருந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவசர சிகிச்சை பிரிவில் ஷாஜகானை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 153

1

0