‘இதுக்கு மேல பேருந்து வராது’.. போதையில் இருந்த நடத்துநர்..? சிகரேட் பிடித்தபடி பயணிக்கு அலட்சிய பதில்..!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 7:45 pm
Quick Share

அரசு பேருந்தில் பயணிகளை ஏற்ற முடியாது எனக் கூறிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சிகரெட் பிடித்தபடி அசால்டாக பதில் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலையான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, தடியன் குடிசை, கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி, ஆடலூர், பன்றிமலை போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயத்தையும், விவசாயக் கூலியையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு வத்தலகுண்டு மற்றும் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு பேருந்து மூலம் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து தினசரி மதியம் 1:30க்கு புறப்படும் அரசு பேருந்து ஊத்து பண்ணைக்காடு, தாண்டிக்குடி, குப்பம்மாள் பட்டி, கேசி பட்டி வழியாக ஆடலூர் பகுதிக்கு மாலை 4.45 மணிக்கு செல்லும். அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, மீண்டும் இதே வழியில் வத்தலகுண்டு வந்து சேரும்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. இந்நிலையில் பேருந்துக்காக தடியன் குடிசை பகுதியில் ஆடலூர் கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் அரசு பேருந்துக்காக காத்திருந்தனர்.

தடியன் குடிசை வந்த அரசு பேருந்து அங்கிருந்து கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாது. நாங்கள் இப்படியே திரும்பிச் செல்கிறோம் என்று பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் கூறியுள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் எங்களது பகுதிக்கு வேறு வாகனம் கிடையாது, நீங்கள் பேருந்து தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அதே போல் பேருந்து நடத்துனர் சிகரெட் பிடித்தபடி உங்களது பகுதிக்கு பேருந்து செல்லாது, நீங்கள் வேறு வாகனத்தை பிடித்துக் கொண்டு செல்லுங்கள் என்று அசால்டாக கூறியுள்ளார். மேலும், இப்பகுதியில் வன விலங்குகளுக்கான யானை மற்றும் காட்டு மாடுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. யானையால் தாக்கி பல விவசாயிகள் இறந்துள்ளனர்.

அதேபோல், தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையும் பொதுமக்கள் ஓட்டுனர் நடத்தினரிடம் கூறியுள்ளனர். தற்போது வனவிலங்குகள் தாக்குதல் அதிகமாக உள்ளது. நாங்களும் பல மணி நேரமாக அரசு பேருந்துக்காக காத்திருந்து உள்ளோம். வேறு பேருந்து கிடையாது, தினமும் பயணிகளை இறக்கி விடும் நீங்கள், இறக்கி விட வேண்டும் என கூறியுள்ளனர். இருவரும் இறக்கி விட முடியாது என்று கூறியதையடுத்து, பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பேருந்து பயணிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பொதுமக்கள் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

மலை கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும், மேலும் மலை கிராமங்களில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. அதேபோல் அரசு பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடையாது. இப்படி உள்ள சூழ்நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் பேருந்துகள் செல்லாது என்று கூறுவதோடு, மது போதையில் இருந்து கொண்டு பேருந்து பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆகவே தமிழக அரசு உடனடி தலையிட்டு இதுபோன்ற பயணிகளிடம் மிரட்டுவதும், பேருந்துகளை இயக்க முடியாது என்று கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் செல்ல வேண்டும் பயணிகளை யாரும் இறக்கி விடக்கூடாது, அதை மீறி இறக்கிவிட்டு இது பயணிகளிடம் சண்டையிடும் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 299

    0

    0