மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கல்தா கொடுத்த திமுக : முன்வாசலில் அறிவித்துவிட்டு பின்வாசலில் பதவியை பறித்த கொடுமை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 4:49 pm
Dmk Betrayed Alliance -Updatenews360
Quick Share

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மறைமுக வாக்கொடுப்பில் பல்வேறு நகராட்சி பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு திமுக கூட்டணி வெற்றி பெற்று கடந்த 2ம் தேதி கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பை திமுக வெளியிட்டது.

அதில் கும்பகோணம் மேயர் பதவி காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு துணை மேயர், நகராட்சி தலைவர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். இதனால் திமுக மீது கூட்டணி கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

குறிப்பாக தருமபுரி பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விசிக வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த பேரூராட்சி தலைவர் பதவி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரை வீழ்த்தி திமுகவை சேர்ந்த சாந்தி புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல கடலூர் மங்கலம்போட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றது. இந்த பகுதி காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுகவின் சம்சாத் பேகம் 8 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். இதனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறியதாக திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதே போல திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் குமார் வெற்றி பெற்றார். கூட்டணிக்கு திமுக துரோகம் செய்து விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விசிகவை சேர்ந்த சுமதி போட்டியின்றி தேர்வான நிலையில் நெல்லைக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தேனியில் நகராட்சி தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரான சற்குணத்தை ஆதரிக்க மறுத்து திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி பெற்றார்.

இப்படி ஒரு பக்கம் இருக்க, குமரி மாவட்ட குளச்சல் நகராட்சியில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு திமுக வேட்பாளரை வீழ்த்தி மற்றொரு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக அறிவித்த ஜான்சன் சார்லஸை வீழ்த்தி திமுக போட்டி வேட்பாளர் நசீர் தலைவராக தேர்வு பெற்றுள்ளார்.

அதே போல கோவை கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் காங்கிரசை வீழ்த்திய திமுக சேர்ந்தவரை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. திமுக அறிவித்த காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ்க்கு எதிராக திமுக வேட்பாளர் சாந்தி வேட்பு மனு தாக்கல் செய்து 11 வாக்குகள் பெற்று ஸ்ரீபெரும்புதூர் சேர்மன் பதவியை கைப்பற்றினார்.

கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செய்தது பச்சை துரோகம் என கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கூட்டணி கட்சியினருக்கே அளித்த வாக்குறுதி நிறைவேற்ற முடியாத திமுக, மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றுமா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

Views: - 657

0

0