பாஜகவுல மொத்தமாவே 7000 பேருதான்… அண்ணாமலையால் ஒன்றும் செய்ய முடியாது… எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ரகுபதி!!

Author: Babu Lakshmanan
5 January 2024, 1:59 pm
Quick Share

டெபாசிட் வாங்க முடியாத கட்சிகளை எல்லாம் கவலைப்பட முடியாது என்றும், மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி தெற்கு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரக் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரகுபதி விழாவில் கலந்து கொண்டு பேசினார், அப்பொழுது பாஜக அரசை கடுமையாக விமர்சித்த அவர் பின்வருமாறு பேசினார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் மூன்றாவது முனையம் திறப்பு விழா நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி, இதனை உணர்ந்தவர் அறிந்தவர் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின். இது ஒன்றிய அரசு நிகழ்ச்சி என்பதால் சற்று அடக்கித்தான் வாசிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் நிகழ்ச்சியை கையில் எடுத்து செய்கின்றார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஒரு சிலர் கோஷங்கள் எழுப்பியதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதுதான். இதைவிட சிறிய கட்சி தமிழகத்தில் இருக்க முடியாது. அவர்கள் ஏதாவது கத்தி விட்டு போக வேண்டும் என்பதற்காக அதை அப்படியே விட்டு விட்டோம், தவிர அடக்கி வாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஏனென்றால் அழைப்பிதழ்கள், அனுமதி சீட்டு அவர்களுடையது. அங்கே நடைபெற்ற விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து வெளியே நிறுத்தப்பட்டார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்த பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான் என்று கூறிமொத்த உறுப்பினர்களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்த வெட்கக்கேடான விஷயம், வேறு என்ன இருக்க முடியும்?

திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு தமிழகத்தில் எந்த சக்தியும், எந்த திராணியும் யாருக்கும் இல்லை. டெபாசிட் வாங்க முடியாத கட்சிகளுக்கு எல்லாம் நாங்கள் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் கத்தி கூச்சல் போடுவது பற்றியும் எங்களுக்கு கவலை கிடையாது. தமிழகத்திற்கு அள்ளி அள்ளி தருவதாக பிரதமர் மோடி கூறுகிறார். தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலை போட்டது திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி. இந்த சாலை வசதி ஏற்படுத்தபடாவிட்டால் போக்குவரத்து வசதி முன்னேறி இருக்காது.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான். கச்சா எண்ணையின் விலை குறைந்தாலும் டீசல், பெட்ரோல் விலை குறைவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் பகல் கொள்ளை அடிப்பதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மத்திய அரசை குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், மக்களை ஏமாற்றும் மோடி மஸ்தான் வேலையை தற்போது மத்திய அரசு செய்து வருகிறது. இது தமிழகத்தில் எடுபடாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 சீட்டுகளை திமுக கூட்டணி பெறும். இதனை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடியும் ஒன்றும் செய்ய முடியாது, அண்ணாமலையும் ஒன்றும் செய்ய முடியாது. உத்தரபிரதேசத்தில் வேண்டுமானால் பாஜக மக்களை ஏமாற்றலாம். அங்கேயும் மக்களிடம் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

இந்தியா என்பது இண்டியா கூட்டணி மட்டும் தான் என்பதை உருவாக்குவோம். பாரதமும் இந்தியாவும் ஒன்றுதான். இந்தியா என்ற வார்த்தையை எதிர் கூட்டணிக்கு வேப்பங்காயாக கசக்கிறது. இங்கே இருக்கின்ற அனைவரும் சகோதரர் சகோதரர்களாக வாழ வேண்டும், என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.

Views: - 884

0

0