வார்டு குறைகளை கூறிய அதிமுக கவுன்சிலர் மீது தாக்குதல் : திமுக ஊராட்சி மன்ற தலைவர் அராஜகம்… அதிமுகவினர் காத்திருப்பு போராட்டம்!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 8:06 pm
Quick Share

கன்னியாகுமரி ; கன்னியாகுமரியில் வார்டு குறைகளை தெரிவித்த அதிமுக கவுன்சிலர் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த பிராங்கிளின் என்பவர் உள்ளார். இவர் தோவாளை தெற்கு ஒன்றிய திமுக செயலாளராகவும் உள்ளார். இவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. சாலை போடும் ஒப்பந்தக்காரர்களுக்கு கைக்கூலியாகும் செயல்படுவதாக புகார்கள் உள்ளது.

இந்நிலையில், இன்று தடிக்காரன்கோணம் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அப்போது, தடிக்காரன்கோணம் ஊராட்சி 12வது வார்டு அதிமுக கவுன்சிலரான அஜன் கெலிடர் என்பவர் தனது வார்டு குறைகள் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு எந்தவிதம் பதிலும் ஊராட்சிமன்ற தலைவர் பிராங்கிளின் கூறவில்லை. மேலும், தொடர்ச்சியாக தனது வார்டு குறைகளை கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளின் உடனடியாக தகாத வார்த்தைகளால் கவுன்சிலரை திட்டி உள்ளார். மேலும், ஆத்திரமடைந்து கண்மூடி தனமாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த கவுன்சிலரின் தாயை பெண் என்றும் பாராமல் அவரையும் தகாத வார்த்தைகளால் கூறி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மீட்டு பூதப்பாண்டி தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இச்சம்பவம் குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட கவுன்சிலர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகவல் அறிந்து அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வேண்டும், இல்லை என்றால் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், எனவும் எச்சரித்தார்.

Views: - 247

0

0