கல்வி காவலர் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!!

17 May 2021, 11:11 am
Tulsi Vandayaar- Updatenews360
Quick Share

காங்கிரஸ் பேரியகத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தஞ்சை மக்களவை தொகுதி முன்னாள் எம்பி துளசி அய்யா வாண்டையார் காலமானார்.

தஞ்சை மாவட்டம் அம்மாபெட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் பிறந்தவர் துளசி அய்யா வாண்டையார். ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தஞ்சை மாவட்டம் பூண்டியில் கலை அறிவியல் கல்லூரியை தொடங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு துணையாக இருந்து கல்விக் காவலர் என பெயர் பெற்றவர். தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இவர் ராஜாஜி, இந்திரா காந்தி, கர்ம வீரர் காமராசர் ஆகியோருடன் நெருங்கி பழக்கமுடைய இவர் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

வாழ்வியல் நெறிகள் குறித்து இன்ப வாழ்வு என்று நூலை எழுதிய இவர், மனோரஞ்சிதம், குரல் கொடுக்கும் வானம்பாடி, பயணங்கள் தொடரும், செல்வச்சீமை ஐரோப்பா, ராக பாவம், வழிபாடு, ஆங்கிலத்தில் ஏ மெலோடியஸ் ஹார்மனி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

எம்பியாக இருந்த காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பள்ளிகளில் கட்டடங்கள் கட்ட பயன்படுத்தினார், தஞ்சையில் பல பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கிடைக்க காரணமாக இருந்தவர்.

அமைதிக்கும் ஆளுமைக்கும் ஒரு சேர்ந்த உதாரணமாக இருந்த வாண்டையார், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்காக கீதை வகுப்புகள் நடத்தியவர். கடைசி வரை கதராடை மட்டுமே அணிந்தவர், இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் தற்போது தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

Views: - 137

0

0