எண்ணூர் துறைமுகத்தில் திடீரென காணாமல் போன சீன மாலுமி… சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 10:08 am
Quick Share

எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த சீனா நாட்டு ‘கியோ யுஹான் -12’ என்ற கப்பலில் சீன மாலுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீன நாட்டை சேர்ந்த ‘கியோ யுஹான் -12’ என்ற சரக்கு கப்பல், கடந்த 6ம் தேதி இந்தோனேஷியா நாட்டில் இருந்து, நிலக்கரி ஏற்றிக் கொண்டு, மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கு புறப்பட்டது. இந்த கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 22 மாலுமிகள் பணியில் இருந்தனர். அதில், சீன நாட்டை சேர்ந்த, கோங் யூவூ, 57, கப்பல் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

மேலும் படிக்க: தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தல்… பயணிகள் இடையே பதற்றம் ; இறுதியில் காத்திருந்த Twist!!

இவர், கப்பல் புறப்பட்ட நாளில் இருந்து காணவில்லை என இந்தோனேஷியா துறைமுகத்தில், கேப்டன் பியூ கொய்பியோ புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கப்பல் கடந்த 20ம் தேதி எண்ணுார் காமராஜர் துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு கப்பலின் பராமரிப்பு பிரிவின் ஒரு பகுதியில், காணாமல் போன கோங் யூவூ இறந்து கிடப்பதை சக மாலுமிகள் கண்டனர். பின், கப்பலின் கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, துறைமுக அதிகாரிகளின் தகவலின்படி, மீஞ்சூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். துறைமுக சுகாதார அதிகாரியின் இறப்பு உறுதி சான்றை பெற்று, சடலத்தை கைப்பற்றி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து உதவி கமிஷனர் கிரி தலைமையில், மீஞ்சூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற் கூராய்வு அறிக்கை பெற்ற பின், இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என, காவல் துறையினர் தெரிவித்தனர்.

Views: - 120

0

0

Leave a Reply