தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு NO USE…. ஜெயலலிதா வழியில் பயணிக்கும் இபிஎஸ் ; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு..!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 9:36 am
Quick Share

தேசியக் கட்சிகளால் தமிழகத்துக்கு நன்மை இல்லை என்று முடிவெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து பாராளுமன்ற தேர்தலை நோக்கி பாசறை பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் தலைமையில், நகர அதிமுக செயலாளர் எஸ்.விஜயபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலையில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து, 33வது வார்டு திமுக அவைத்தலைவர் கனகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கூட்டத்தில் இளைஞர் இளம்பெண் பாசறை மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் பரமசிவம் பேசுகையில் : அ.தி.மு.க., அடுத்த தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான இயக்கமல்ல. அடுத்த தலைமுறையை எதிர்கொள்வதற்கான இயக்கம். 2008ல் இளைஞர் இளம்பெண் பாசறை அம்மா ,வால் துவக்கப்பட்டது. இந்தியாவில் ஜனநாயகம் உயிரோட்டமாக இருப்பதற்காக துவக்கப்பட்ட கட்சிதான் அ.தி.மு.க.,. கடைக்கோடி தொண்டனுக்கும் அ.தி.மு.க.,வில் பதவி கிடைக்கிறது. தி.மு.க.,வில் அப்படி அல்ல. உதயநிதி, இன்பநிதிக்காவே சேலத்தில் மாநாடு நடத்தினார்கள்.

தீய சக்திகளை ஒழிப்பதற்காக எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க.,வை துவங்கினார். 75 லட்சம் தொண்டர்களுடன் இருந்த அ.தி.மு.க. அம்மா, காலத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்களாகவும், எடப்பாடியார் காலத்தில் இரண்டரைக் கோடியாகவும் உயர்ந்தி, ஆளுமை மிக்க 3ம் தலைமுறை தலைவராக உருவெடுத்துள்ளார். பா.ஜ.க,விடம் அ.தி.மு.க., அடிமையாக உள்ளது போல் ஒரு மாயையை உருவாக்கி உள்ளார்கள்.

அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை மக்களுக்கு சொல்லவேண்டும். மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். நல்லவர்களை பார்த்து ஓட்டு போட வேண்டும். நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்கள் தேசத்துரோகிகள். அ.தி.மு.க., திட்டங்களை தி.மு.க., நிறுத்திவிட்டது.

கல்விக்கு முக்கியத்துவம் தந்த அரசு அ.தி.மு.க.,. தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச நோட்-புக், காலணி என்று ஒரு மாணவிக்கு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை கொடுத்து வந்ததை நிறுத்திவிட்டார்கள். இப்போது, கல்லுாரிக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்று கொடுப்பதாக 3 ஆண்டுகளில் ரூ. 36 ஆயிரத்தோடு நிறுத்திவிட்டது. திராவிட மாடல் என்பது நுாதனமாக ஊழல் செய்வது. ஊழல் செய்ய முடியாத திட்டங்களை தி.மு.க., நிறுத்திவிடுவார்கள். கருணாநிதி பெயரை நிலை நிறுத்துவதில் இருக்கும் தி.மு.க.,வின் அக்கறை, மற்ற திட்டங்களில் நிறைவேற்றுவதில் இல்லை. ஒரு செங்கலை வைத்து உதயநிதி மக்களை ஏமாற்றி விட்டார்.

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வுக்கு தடை என்று சொன்னவர்கள், 80 லட்சம் கையெழுத்து வாங்குகிறார்கள். அண்ணாமலை ஊழலுக்கு எதிராக லேகியம் கொடுப்பதாக கூறியிருக்கிறார். அவர் முதலில் கர்நாடகாவில் சென்று லேகியம் கொடுக்க வேண்டும்; அங்கு தான் காண்ட்ராக்ட்காரர்கள் 40 சதவீதம் லஞ்சம் வாங்குவதாக நோட்டீஸ் கொடுத்து அங்கு பா.ஜ.க ஆட்சி பறிபோனது. காலில் விழுந்து செல்வதற்கு லேகியம் கொடுப்பதாக சொல்லும் அண்ணாமலை, அத்வானி காலில் விழுந்த மோடிக்கு கொடுக்கட்டும்.

சீமான் பேசுவதை பார்த்தால் பிரபாகரன் இப்போது உயிரோடு இருந்தால், முதலில் சீமானைத்தான் அவர் துப்பாக்கியால் சுட்டு இருப்பார். விடுதலைப்புலிகளுடன் கூடவே இருந்து துப்பாக்கியால் சுட்டதுபோல் பேசிவருகிறார். தி.மு.க., இளைஞர்களை சிந்திக்கவிடவில்லை. தமிழகத்தில் சாராயம், கஞ்சாவுக்கு தாராளமாக கிடைக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். தேர்தலில், இளைஞர், இளம்பெண் பாசறையை சேர்ந்தவர்கள் பார்லி., தேர்தலில் கடுமையாக உழைக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், துாத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில் :- நமக்கான சின்னம் இரட்டை இலை. மக்களுக்கு இரட்டை இலை சின்னத்தை தெரியப்படுத்தனும். பத்திரிக்கையில் வரும் கருத்துக் கணிப்பை மீறி அ.தி.மு.க., வெற்றி பெறும். அ.தி.மு.க., யாருக்கும் அடிமை இல்லை. மக்களுக்குத்தான் அடிமைாக இருந்த இயக்கம் அ.தி.மு.க., என்பதை முத்திரை பதிக்க போகிறோம்.

நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி தந்த நாயகர் எடப்பாடியார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் மக்கள் எடப்பாடியார் ஆட்சி பற்றி பேசுகிறார்கள். 2021 தேர்தல் களத்தில் அ.தி.மு.க.,தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியால் வெற்றி பெற்றார்கள்.

அந்த தேர்தல் வாக்குறுதியே அவர்களை இந்த தேர்தலில் திருப்பி தாக்கும் ஏவுகணையாக மாறி இருக்கிறது. 3 ஆண்டுகள் முடிந்தபின்னும், நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை. விவசாய காப்பீடு திட்டம், பொங்கல் பரிசு தொகை எல்லாம் எடப்பாடியார் அள்ளிக் கொடுத்தார். மக்களிடம் இதை தெரியப்படுத்தனும். விடியா ஆட்சியில், எடப்பாடியார் வந்தால்தான் விடிவு கிடைக்கும். மக்கள் அல்லல்படுகின்றனர்.

தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நன்மையில்லை என்று முடிவெடுத்த அம்மா,வழியில் எடப்பாடியார் முடிவு எடுத்து உள்ளார். 10 ஆண்டு பா.ஜ.க ஆட்சி மீதும், 3 ஆண்டு தி.மு.க., ஆட்சி மீதும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். களம் நமக்கு சரியாக உள்ளது. நன்றாக உழைக்கும் பொறுப்பாளர்களுக்கு பிரதிபலன் உண்டு. கொரனோ காலத்தில் இந்திய துணை கண்டத்தில் மாணவர்கள் அனைவரையும் ஆல்பாஸ் போட்ட ஒரே முதல்வர் எடப்பாடியார். தேர்தலில் சிப்பாய்களாக இளைஞர், இளம்பெண்கள் உருவெடுக்கவேண்டும். அதில் இருந்துதான் மேஜர், கர்னல் என்று உருவாக்கப்படுவார்கள், என்றார்.

Views: - 263

0

0