ஆந்த்ராக்ஸ் நோயால் பெண் யானை உயிரிழப்பு: கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வனத்துறை அறிவுறுத்தல்..!!

13 July 2021, 1:01 pm
Quick Share

கோவை: ஆனைக்கட்டி பகுதியில் இறந்த பெண் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி அருகே சலீல் அலி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வனத்திற்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தனர். இது தொடர்பாக மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் மற்றும் ரேஞ்சருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், ஆனைகட்டி மற்றும் வீரபாண்டி அரசு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானையின் வாய் மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால், ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பினால் யானை இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த பெண் யானை, தனது கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து வந்து நோய்வாய்பட்டு இருக்கலாம் எனவும், யானை கூட்டம் கடந்த 8ம் தேதி சேம்புக்கரை வனப்பகுதிக்கு அருகே தென்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில் யானை உயிரிழந்ததற்கு ஆந்த்ராக்ஸ்தான் காரணம் என தெரிந்ததாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். மேலும் ஆனைகட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட, கால்நடை துறைக்கு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 145

0

0