வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் : கிராமத்திற்கு செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2021, 3:11 pm
கன்னியாகுமரி : கனமழை காரணமாக கீரிப்பாறை பகுதியில் அமைக்கப்பட்ட 6 லட்சம் மதிப்பிலான தற்காலிக பாலம் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்ய துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து விடிய விடிய மழை பெய்த நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கீரிப்பாறை பகுதியில் முத்துக்குழி, மாறாமலை போன்ற மலைப்பகுதியில் இருந்து பெருஞ்சாணி அணை நீர்பிடிப்பு பகுதிக்கு செல்லும் காட்டாற்று வெள்ளம், மழை காரணமாக அதிகமாக காணப்பட்டது.
இதனால் அரசு ரப்பர் கழக குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாலம் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட மழை சேதம் காரணமாக இப்பகுதியில் இருந்த பாலம் சேதமடைந்த காரணத்தால் தற்போது 6 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இழுத்து செல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியினர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரிகளும் அப்பகுதியில் பார்வையிட்டு வருகின்றனர்.
0
0