திட்டமிட்டு வேண்டுமென்றே அதிமுக நிர்வாகிகள் கைது : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
15 July 2022, 10:15 pm
Quick Share

கரூரில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கரூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் இருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அத்துமீறி அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தோரணக்கல்பட்டி கிராமத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அரசாணை பெற்று பூர்வாங்க பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அந்த இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கூறப்படும் நிலையில், இதே இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் புதிதாக கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தோரணக்கல்பட்டியில் முகாம் அமைக்க கூடாது என தோரணக்கல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் பொது இடங்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை தோரணக்கல் பட்டியில் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பொழுது காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி இதுகுறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

ஆனால், எந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாத நிலையில், நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தோரணக்கல் பட்டியில் இலங்கை தமிழருக்கான மறுவாழ்வு முகாம் கட்டுமான பணிகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கப்பட்டது. இதனை அறிந்து அந்த பகுதியில் கரூர் மாநகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ஏகாம்பரம், முன்னாள் சணப்பிரட்டி ஊராட்சி தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் அப்பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு வந்த போலீசாரும்,வருவாய் துறை அதிகாரிகளும் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர்களின் வீடுகளுக்கு சென்ற தனிப்படை போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அரசு கட்டுமான பணிகளை தடுத்த குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

இலங்கை தமிழர்கள் முகாம் அமைக்கப்பட உள்ள இடத்தில் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தோரணக்கல்பட்டி, கோடாங்கிபட்டி, கரூர் பேருந்து நிலையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வருகை தந்தார். ஆனால், அங்கு பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே மனு அளிக்க அனுமதிக்கப்படும் என தடுத்து நிறுத்தினர். அப்போது, முன்னாள் அமைச்சருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெற்று அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதித்தனர். பின்பு, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகதிடம் புகார் மனுவினை அளித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் அமைக்க இருந்த இடத்தில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கிறார்கள். இதற்கு அப்பகுதியில் வாழும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு தற்போது கட்டுமானப் பணிகளை துவங்கி இருக்கிறார்கள்.

நேற்று அதிமுக நிர்வாகிகள் இது தொடர்பாக கேட்ட போது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி 3 பேரை கைது செய்துள்ளனர். அதுவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்க தக்கது. அரசு புறம்போக்கு நிலத்தில் பணிகள் செய்யட்டும், தனியாருக்கு சொந்தமான இடத்தில் பணிகள் துவங்கியதால் மட்டுமே அவற்றை அதன் உரிமையாளர் கேட்டதற்கு கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தையும், நீதிமன்றத்தையும் நாட உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 616

0

0