தண்டவாளத்தில் சிக்கிய சரக்கு லாரி.. வேகமாக வந்த ரயில் ; கோவையில் திக்..திக்.. சம்பவம்!!

Author: Babu Lakshmanan
10 November 2022, 11:52 am
Quick Share

கோவை துடியலூர் ரயில்வே கேட் பகுதியில் சரக்கு ஏற்றி வந்த லாரி, நேற்று இரவு கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களின் உயரத்தைவிட 1 அடி வரை உயரமாக உள்ளது. அது அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பல இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், கார்களின் அடிப்பகுதி தண்டாவாளங்களில் உரசி சேதமடைகின்றன. அதேபோல், அதிக பாரத்துடன் வரும் லாரிகள் தண்டவாளங்களை கடக்க முடியாமல் ஆக்சில் உடைந்து பழுதடைந்து அங்கேயே நிற்கின்றன.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலுக்காக துடியலூர் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அவ்வழியாக சுமார் 30 டன் எடையுள்ள சரக்கு ஏற்றி வந்த லாரி தண்டவாளத்தை கடக்க முற்பட்டது. அப்போது, தண்டவாள உயரம் காரணமாக, அதனை கடக்க முடியாமல் அப்படியே, தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றுவிட்டது.

அந்த நேரம் வந்த கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலுக்கு கேட் கீப்பர் உடனடியாக சிகப்பு விளக்கை காண்பித்து லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக லாரி மீது ரயில் மோதும் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ளி நகர்த்த முற்பட்டனர். ஆனால், லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் 1 மணி நேரம் கடந்தும் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து, லாரியின் பின் பக்கத்தில் இருந்து மற்றொரு டெம்போ மூலம் தள்ளி தண்டவாளத்தில் இருந்து லாரியை பொதுமக்கள் நகர்த்தினர்.

இதையடுத்து, உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டு அங்கு காத்திருந்த பயணிகள் ரயில் 1 மணி நேர தாமதத்திற்கு பின் கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. இதே ரயில்வே கேட் பகுதியில் ஏற்கனவே தண்டவாள உயரம் காரணமாக 3 லாரிகள் தண்டவாளத்தில் நடுவே பழுதாகி நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, உடனடியாக தண்டவளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 485

0

0