‘படிக்கட்டில் தொங்காதே’ என சொன்ன ஓட்டுநருக்கு மிரட்டல் : பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்..!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 9:55 am
Quick Share

விழுப்புரம் : படிக்கட்டில் தொங்கி வந்த மாணவர்களை படிக்கட்டில் இருந்து மேலே ஏறும்படி கூறிய ஓட்டுநரை, மாணவர்கள் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாதாம்பாளையம் கிராமத்திற்குச் சென்ற நகர அரசு பேருந்தில் மாணவர்கள் காந்திசிலை, மாதாகோயில் உள்ளிட்ட பேருந்து நிறுத்தத்தில் அதிக அளவில் ஏறி பயணித்துள்ளனர்.

பேருந்திற்கு உள்ளே இடமிருந்தும் படிக்கட்டிலேயே தொங்கிக்கொண்டு வந்த மாணவர்களிடம் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் உள்ளே வரகூறியும் வராமல், கூட்டமாக படியிலேயே தொடர்ந்து ஆபத்தான முறையில் தொங்கிய படி பயணித்துள்ளனர். இதனால், ஓட்டுநர் மாணவர்களை படியிலிருந்து மேலே ஏறும்படி கூறும் பொழுது, மாணவர்கள் ஓட்டுநரை மிரட்டியுள்ளனர்.

இதனால், பயந்து போன ஓட்டுநர் தாலுக்கா காவல் நிலையம் எதிரே பேருந்தை நடுரோட்டில் பயணிகளுடன் நிறுத்தி விட்டு நடத்துனருடன் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பேருந்து 15 நிமிடத்திற்கு மேலாக நடுரோட்டிலேயே பயணிகளுடன் நின்றது.

பின்னர், தாலுக்கா காவல் நிலைய போலீசார் மாணவர்களை கண்டித்து உள்ளே ஏறச்சொல்லி பாதுகாப்புக்காக காவல் துறையினர் பேருந்திலேயே பயணித்ததால் பேருந்து இயக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 443

0

0