7 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்க போகுதாம்: லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க..!!
Author: Aarthi Sivakumar22 October 2021, 9:24 am
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று திடீர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே திடீர் திடீரென கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், 24ம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
25ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
0
0