தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த ஓட்டு சதவீதம்… 3வது முறையாக திருத்தம் செய்த தேர்தல் ஆணையம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 4:14 pm
TN Vot
Quick Share

தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த ஓட்டு சதவீதம்… 3வது முறையாக திருத்தம் செய்த தேர்தல் ஆணையம்!!!

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என 40 இடங்களுக்கும் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம் குறித்து இரவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் ஓட்டு சதவீதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு அன்று நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது என்று கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதியாக வெளியிடப்படும் வாக்கு சதவீதம் என்பது ஒன்று முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க தான் செய்யும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை சுமார் 3 சதவீதம் வரை குறைந்தது. இதையடுத்து குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் நேற்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகள் மற்றும் மொத்த வாக்கு சதவீததத்தை அறிவிப்பதாக இருந்தது. ஆனால் 3க்கும் மேற்பட்ட நேரங்கள் கூறியும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது நடக்கவில்லை.

இதையடுத்து நேற்று மாலையில் தேர்தல் ஆணையம் தமிழக ஓட்டு சதவீதம் தொடர்பான விபரங்களை அறிக்கையாக வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது ஓட்டு சதவீத அளவை இந்திய தேர்தல் ஆணையம் 3வது முறையாக மாற்றி அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் பதிவாகி உள்ள ஓட்டு சதவீதம் 0.15 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பதிவான மொத்த ஓட்டு சதவீதம் என்பது 69.71 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 116

0

0