நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான தடுப்பு வேலி திருட்டு : ஒருவர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2021, 1:36 pm
திண்டுக்கல் : கொடைக்கானல் அடுக்கம் சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 10 லட்சம் மதிப்புள்ள தடுப்பு வேலிகளை திருடியவர் கைது, லாரி பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அடுக்கம்-பெரியகுளம் மலைச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது .இந்த சாலையில் ஓரத்தில் விபத்துக்களை தடுக்கும் விதமாக இரும்பிலான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பு வேலிகள் அவ்வப்போது சேதம் செய்யப்பட்டு காணாமல் போய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் இரவு நேரத்தில் தடுப்பு இரும்பு வேலிகளை சிலர் கழற்றி லாரியில் ஏற்றுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தொடர்ந்து பொதுமக்களை பார்த்த அவர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
இதுபற்றி கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் . கொடைக்கானல் நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இரும்பு தடுப்பு வேலிகளை திருடிய கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெபக்குமார் என்பவரை கைது செய்தனர்.
அவர் திருடி லாரியில் கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான இரும்பு தடுப்பு வேலிகளையும் கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவம் இதற்கு முன்னர் நடந்ததா என்பது பற்றியும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0
0