காலையில் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் எனக்கு கோபம் வரும் : அமைச்சர் முத்துசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 2:19 pm
Minister Muthusamy - Updatenews360
Quick Share

கோவையில் 17.45 கோடி மதிப்பில் பல்வேறு தொகுதிகளில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் முத்துசாமி கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு அன்றாடம் பயன்படும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கோவை மாநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் 567 கிமீ.க்கு சாலைகள் அமைக்கப்படுகிறது எனவும் கூறினார்.

கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் சைக்கிள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது என கூறிய அவர், மற்றவர்களுக்கும் மிக விரைவில் சைக்கிள் வழங்கப்படும் என்றார்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை என தெரிவித்த அவர், இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். இதனால் யாரும் தொய்வடைந்து விட போவதில்லை எனவும் கூறினார். அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சோதனைகளால் பயத்தை ஏற்படுத்தி விட முடியாது, எனவும் எங்களது கவனத்தை திருப்ப முடியாது எனவும் கூறினார். பெங்களூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் எதிர்கட்சி கூட்டம் சிறப்பாக நடக்கும் என்றார்.

கோவை மத்திய சிறைச்சாலை இடம் மாற்றம் செய்யப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்போம் என ஒரு இடத்தில் கூட நாங்கள் எதுவும் சொல்லவில்லை எனவும் டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்சனை தீர்ந்தால் தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க 18 தொழிற்சங்கங்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக தீர்க்கும் பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உடன் ஒப்பந்தம் போட தயாராக உள்ளதாகவும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது எனத் திட்டவட்டமாக சொல்லியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொழிலாளி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே முதல் இலக்கு என்றார். மது பாட்டில்களால் பல்வேறு பிரச்சனைகள் வருவதால், டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தான் சொன்னோம் என்றார்.

ஆலோசணைகளை அன்பாக சொன்னால் கேட்டுக்கொள்வோம் என கூறிய அவர், அதற்கு ஏன் திட்டுகிறார்கள்? நான் இரண்டு நிமிடம் பேசியதை அரை நிமிடம் எடுத்தால் தவறாக தான் வரும் எனவும் கூறினார்.

மதுபாட்டில்கள் சேதமடைவது, கலப்படம் செய்ய வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது, அதனால் டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து, கருத்துகள் கேட்டே கொண்டு வரப்படும் என்றார்.

டெட்ரா பேக், 90 மிலி. மது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் அவை வந்தாலும் வரலாம், வரமாலும் போகலாம் என்றார்.

மேலும் காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை பொறுத்து கொள்ள முடியாது என கூறிய அவர், கடுமையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள், இதனைத் தவிர்க்க மாற்று வழி ஆலோசனைகளை சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்.

டாஸ்மாக் மூலம் பெரிய வருமானம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லை எனவும் சட்ட விரோதமாக மது வாங்கி தவறு நடந்து விட கூடாது எனவும் தெரிவித்தார். மதுக்கடையில் காத்திருப்பதை தவிர்க்க 90 மி.லி. மது கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது எனவும் மது குடிப்பவர்களை படிப்படியாக நமது பக்கம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சிறிய நூற்பாலைகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, என தெரிவித்த அவர்,அதன் முடிவு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர் உட்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 262

0

0