மனைவி கண்ணெதிரே இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை: முன்விரோதம் காரணமாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வெறிச்செயல்
18 September 2020, 5:53 pmகரூர்: கரூரில் முன்விரோதம் காரணமாக மனைவி கண்ணெதிரே இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சின்ன ஆண்டான்கோயில் மேட்டு தெருவைச் சேர்ந்த குணசேகரன் கரூர் கோவை சாலையில் இளநீர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 27) இளநீர் கடை அருகில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். இன்று குணசேகரன் அவரது மனைவியும் இளநீர் மொத்தமாக விலைக்கு வாங்குவதற்கு பொள்ளாச்சி சென்று உள்ளனர். இதனால் கிருஷ்ணமூர்த்தி மனைவி சஸ்மிதா (23) கரும்பு ஜூஸ் கடையிலும், கிருஷ்ணமூர்த்தியும் இன்று காலை வியாபாரம் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சஸ்மிதா கண்ணெதிரே கிருஷ்ணமூர்த்தியை அரிவாளால் தலை இடது கை முதுகு கழுத்து போன்ற பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர போலீசார் கிருஷ்ணமூர்த்தி பிணத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காலை அலுவலக நேரத்தில் பிஸியான கோயம்புத்தூர் சாலையில் கொலை நடந்திருப்பது இப்பகுதி மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது