கோயம்பேடு சந்தை திறப்பு : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு..!
27 August 2020, 9:49 amசென்னையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததையொட்டி, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து திருமழிசையில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. எனினும், போதுமான இடவசதி இல்லை எனவும், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் வணிகர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வரும் நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அண்மையில் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன்பின், தலைமைச்செயலகத்தில் வணிகர் சங்க நிர்வாகிகளோடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.