நவராத்திரி விழா இறுதி நாள் : முத்தங்கி அலங்காரத்தால் ஜொலித்த வள்ளியம்மன்.. பக்தர்கள் பக்தி பரவசம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2021, 4:47 pm
கோவை : நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான இன்று மருதமலை அடிவாரத்தில் உள்ள வள்ளியம்மன் கோயிலில் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், 25 கண்ணி பூஜை மற்றும் 9வடுக பூஜை நடைபெற்றது.
புரட்டாசி மாதத்தில் இறுதி நாளான இன்று விஜயதசமி பண்டிகை மற்றும் சரஸ்வதி பூஜை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட்டது. நவராத்திரியில் வீடுகள் மற்றும் ஆலயங்கள் தோறும் கொலு வைத்தும் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளை வழிபட்டு வித விதமான பூஜைகள் செய்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 54வகையான கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளது ஒன்பது நாட்களும் புதுப்புது அலங்காரம், மற்றும் பூஜைகள் செய்யபட்டது.
இதில் ,சரஸ்வதி, மகாலெட்சுமி, ஐஸ்வர்ய லெட்சுமி, முருகன், விநாயகர், பள்ளிகொண்ட பெருமாள், திருப்பதி பிரம்மோற்சவ செட், பிரதோஷ மூர்த்திகள், அரசியல் தலைவர்கள், ஐயப்பன், குரு வாயூரப்பன், சாய்பாபா, விஷ்ணு, சிவன், பார்வதி உள்ளிட்ட பல்வேறு விதமான பொம்மைகளுடன், மனித வாழ்வில், பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் அனைத்து வித நிகழ்வுகளையும் தத்ரூபமாக கூறும் கொலு, இராவண காவியம், கிரிக்கெட் விளையாடும் விநாயகர், மறைந்த தமிழக முதல்வர் அம்மையார் ஜெயலலிதா, என அனைத்து விதமான கொலு பொம்மைகளும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் படைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன.
நவராத்திரி பண்டிகையை ஒட்டி இறுதி நாளான இன்று அருள் மிகு வள்ளியம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக முத்தங்கி அலங்காரம், 25கண்னி பூஜை மற்றும் 9 வடுக பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வள்ளியம்மனின் அருளை பெற்றனர். மேலும் பழமை வாய்ந்த ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கண்டு தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். கொரோனா கால விதிமுறைகள் அமலில் உள்ளதால் அளவான பக்தர்களே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
0
0