கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் போல ஆளுநர் மாளிகை குண்டு வெடிப்பு பின்னணியும் வெளியே வரும் : எல் முருகன்!!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2023, 8:01 pm
கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் போல ஆளுநர் மாளிகை குண்டு வெடிப்பு பின்னணியும் வெளியே வரும் : எல் முருகன்!!
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்;- தமிழகத்தில் தற்போது சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை. கவர்னர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதே நபர் தான் பாஜக கட்சி அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தினார்.
சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில், ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். திருவாரூர் சென்று ஆதீனத்தை சந்தித்து விட்டு வரும் வழியில், அவரது வாகனத்தின் மீதும் தாக்குதல் கவர்னருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. யார் இவரது பின்னணியில் உள்ளனர்.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் வெட்டு, குத்து சம்பவங்கள் நிகழ்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக முதல்வர், கட்டுப்படுத்தவில்லை. கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் கூட கஞ்சா விற்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியதை சாதாரண நிகழ்வாக பார்க்கக் கூடாது. அந்த நபருக்கு பின்னணியில் இருந்து இயக்கியது யார்? இந்த வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் முழு உண்மை வரும்.
கோயம்புத்துாரில் சிலிண்டர் வெடிப்பு என்று போலீசார் மறைத்த சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரித்த பின், தீவிரவாதிகள் குண்டு தயாரிப்பதற்காக ஏற்பாடு செய்ததை கண்டுபிடிக்க முடிந்தது. தேசவிரோத செயல்கள், தேச விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் கட்டுபபடுத்த வேண்டுமென்றால், கவர்னர் மாளிகையில் குண்டு வீசியதை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். குண்டு வீசிய நபரை, திமுக பொறுப்பில் உள்ள வக்கீல் தான் ஜாமீனில் எடுத்துள்ளார்.
ஆனால், சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில்லாமல், மக்களை திசை திருப்பும் விதமாக பேசியது வன்மையாக கண்டிக்கத் தக்கது. தமிழக அரசு, குண்டு வீசிய வழக்கை, சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
0
0