காதலியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு : காதலனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
Author: Babu Lakshmanan1 பிப்ரவரி 2022, 7:44 மணி
கரூரில் காதலித்த பெண் பேச மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், 23 ஆயிரம் விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கரூர் – ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவு அருகில் தனியார் (கரூர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்) பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த ஆதியேனந்தல் கிராமத்தை சார்ந்த உதயகுமார் என்ற மாணவன் படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படிக்கும் சோனாலி என்ற மாணவியும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, மாணவனின் செயல்பாடுகள் சரி இல்லாததால் பள்ளி நிர்வாகம் மாணவனை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனிடையே, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி அன்று காலை 9.45 மணியளவில் கல்லூரிக்கு வந்த மாணவன் உதயகுமார், வகுப்பறையில் அமர்ந்திருந்த சோனாலியை தான் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளான். அப்போது வகுப்பறையில் இருந்த பேராசிரியர் சதீஸ்குமார், அதை தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கி விட்டு தப்பியோடி விட்டான்.
இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி சோனாலியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி உதயகுமார் கைது செய்யப்பட்டும், இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதற்கான தீர்ப்பை மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு வழங்கினார். கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும், பெரும் காயம் ஏற்படுத்துதலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும், கொலை முயற்சிகாக 2 ஆண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அத்து மீறி நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், பொது இடத்தில் கெட்ட வார்த்தைகளை பேசிய குற்றத்திற்காக 3 மாத சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளி உதயகுமாரை போலீசார் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
0
0