கூலித் தொழிலாளியின் உயிரை பறித்த 800 ரூபாய்.. கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் கதறி அழுத பெண்… உறவினர்கள் சாலை மறியல்!!

Author: Babu Lakshmanan
9 August 2023, 9:44 am
Quick Share

தருமபுரி ; 800 ரூபாய் வட்டி தொகை வழங்காததால் பைனான்சியர் பேசிய பேச்சுக்கு மன உளைச்சல் அடைந்த கூலித் தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தில் கூலி தொழிலாளி சங்கர் என்பவர் கடந்த 2022 ஏப்ரல் மாதத்தின்போது தனது இருசக்கர வாகனத்தை ரூ.3 ஆயிரத்திற்கு நல்லத்தம்பி என்பவரிடம் பைனான்ஸ் வைத்துள்ளார். 3000 ரூபாய் கட்டி முடித்து அதற்கான வட்டி தொகையை கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நல்லதம்பி கடன் வாங்கிய சங்கர் வீட்டிற்கு சென்று வட்டி தொகையை செலுத்துமாறு கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, சங்கரின் மகன் 800 ரூபாய் வட்டி தொகையை கட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு நேரத்தில் மன உளைச்சல் அடைந்த சங்கர் அவருடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அரூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையம் முன்பு கூடியிருந்த உறவினர்கள் பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது, பைனான்ஸ் கொடுக்கப்பட்ட நல்லதம்பியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது உறவினர்கள் நல்ல தம்பியை ஆதங்கத்தில் தாக்க முற்பட்டனர். அப்போது, காவல்துறையினர் நல்லதம்பி அழைத்து காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

800 ரூபாய் வட்டி தொகை கட்ட வேண்டும் என வற்புறுத்தி கூலி தொழிலாளியை தகாத வார்த்தைகளால் திட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன் கணவரின் உயிரிழப்பை தாங்க முடியாத மனைவி கதறி அழுத காட்சி காண்பவர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Views: - 317

0

0