மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியது : பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2021, 10:21 am
Bhavani River Warn -Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ளது பில்லூர் அணை.கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீராக உள்ளது.

இதனால் அணை தனது முழுக்கொள்ளளவான 100 அடியில் தற்போது 97 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு வருவாய்த்துறையினர் நேற்றிரவு முதலே பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர். மேலும்,பவானி ஆற்றங்கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்றிரவே பவானியாற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை நேரில் சென்று சந்தித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினார். மேலும்,தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தனியார் மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, சிறுமுகை, வச்சினம்பாளையம், ஆலாங்கொம்பு உள்ளிட்ட ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும்,யாரும் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ,துணி துவைக்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 164

0

0