மாதனூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம்.. திட்டம் எல்லாம் தயார்… அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
18 June 2022, 4:56 pm
Quick Share

வேலூர் : வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மற்றும் மாதனூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்களை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் வரும் 21 ஆம் தேதி தமிழக முதல்வர் வருகை தந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவுள்ளார்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி ஏற்பாடு செய்துள்ள முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு, பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது :- வேலூர் மாவட்டம் மாதனூர் மற்றும் விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரிஞ்சிபுரம் மேம்பாலத்திற்காக ரூ.30 கோடியும்,மாதனூர் மேம்பாலத்திற்காக ரூ.28 கோடியும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது விரைவில் பணிகள் துவங்கும்.

காங்கேயநல்லூர் முதல் சத்துவாச்சாரி வரையிலான தரைபாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு விலைவாசி உயர்ந்துள்ளதால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் துவங்கும்.

தமிழகத்தில் கோவை, சென்னை,மதுரை ஆகிய மாநகரங்களில் பறக்கும் சாலைகள் உள்ளதை போல், வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் நகரிலும் பறக்கும் சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்து சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

வேலூர் புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனையின் அருகில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை ஒன்று அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்ற உறுதியளித்துள்ளோம். அதன்படி சுரங்கப்பாதை அமைக்க சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்கள் ஒப்புதல் தந்தால் மகிழ்ச்சியாக அமைப்போம்.

இல்லையென்றால் எங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நில எடுப்பு செய்து விரைவில் சுரங்கப்பாதை அமைப்போம், என்று கூறினார்.

Views: - 737

0

0