கோவையில் பிப்.21ல் ஜல்லிக்கட்டு கால்கோள் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

9 February 2021, 12:31 pm
Quick Share

கோவை: கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற உள்ள நிலையில் இந்தாண்டு ஆண்டு 1000 காளைகள் 900 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் கடந்த 2018 ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதன் படி 4 ஆவது ஆண்டாக வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி கோவை செட்டிபாளையத்தில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் காளைகளை அழைத்து வர உள்ளனர். ஜல்லிகட்டி போட்டிகள் நடைபெறுவது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் செட்டிபாளையம் மைதானத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கால்கோள் நடும் விழா இன்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கால்கோளை நட்டு வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. தமிழகத்தின் கலாச்சார அடையாளம் நமது பழமையான வீர விளையாட்டு.

ஜல்லிக்கட்டு விளையாட்டு 200 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. இதனை மீட்டெடுத்த பெருமை இந்த அரசுக்கு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிகட்டை மீட்க உரிமை போராட்டம் நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்லவ்ம் டெல்லி சென்று உத்தரவை பெற்றார். அதனை தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து நான்காவது முறையாக கோவையில் மாவட்ட நிர்வாகம், ஜல்லிகட்டு சங்கம் இணைந்து உரிய பாதுகாப்ப்புடன் போட்டியை நடத்துகிறது.

கடந்த 2018ம் ஆண்டு 445 காளைகளும், 323 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 2019ல் 746காளைகள் 599 மாடுபிடி வீரர்களும், 2020ல் 940 காளைகளும், 645 வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பங்கேற்கும் காளைகளும், வீரர்களும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

வெற்றி பெறுவோர்க்கு மாருதி கார், காளைகளுக்கு தங்க நாணயம், சைக்கிள் பீரோ, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு 1000 காளைகள் 900 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், 5 லட்சம் மக்கள் இதனை பார்வையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை துறை சார்பில் 18 குழுக்களும்,
பொது சுகாதாரத்துறை சார்பில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வீரர்கள் முழுமையான பரிசோதனைக்கு பின் தகுதி அடிப்படையில் கலந்து கொள்ள முடியும்.

காத்திருப்போர் கூடத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க மேற்கூரை அமைக்கப்படும். விளையாட்டு நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி காமிரா கொண்டு கண்காணிக்கப்படும்.

உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். விவசாயிகளின் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த முதலமிச்சருக்கு ஜல்லிக்கட்டு சங்கம், கோவை மாவட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ எட்டிமடை ஏ.சண்முகம், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, மாவட்ட எஸ்.பி அருளரசு, எம்.எல்.ஏ கள், அம்மன் அர்ஜுணன், ஆறுகுட்டி, பொள்ளாச்சி ஜெயராமன், கந்தசாமி , ஒ.கே.சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0

1 thought on “கோவையில் பிப்.21ல் ஜல்லிக்கட்டு கால்கோள் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Comments are closed.