விற்பனைக்காக 4 மாத குழந்தை கடத்தல்… கேரளாவில் சுத்துப்போட்ட தமிழக போலீஸ்… பெண் கைது…!!

Author: Babu Lakshmanan
27 July 2023, 2:12 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட நிலையில் இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி விற்பனை செய்யும் ஏரல் பகுதியை சேர்ந்த முத்துராஜ்-ஜோதிகா தம்பதியரின் 4 மாத குழந்தை ஹரியை கடந்த 23ம் தேதி நள்ளிரவில் பெண் ஒருவர் கடத்தி சென்றார். குழந்தையின் தாயார் ஜோதிகா வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சி ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தி சென்றது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சாந்தி என்ற பெண் தூக்கிச் சென்றது தெரியவந்தது.

மேலும், அந்த பெண் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வரவே, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கடத்திச் சென்ற சாந்தியை கைது செய்து, அவரிடமிருந்து ஆண் குழந்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட நான்கு மாத குழந்தையை வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து குழந்தையின் பெற்றோரிடம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் தலைமையில் போலீசார் ஒப்படைத்தனர்.

குழந்தையை மீட்க சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 207

0

0