ஏடிஎம் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட கொள்ளையன்… சட்டென்று உள்ளே சென்ற போலீசார்… பேந்த பேந்த விழித்த மங்குனி திருடன்…!!!

Author: Babu Lakshmanan
6 August 2021, 4:04 pm
Quick Share

நாமக்கல் : ஏடிஎம்மில் கொள்ளையடிக்கச் சென்ற வடமாநில கொள்ளையன், மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு பேந்த பேந்த விழித்த சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறியுள்ளது.

அண்மை காலமாக ஏடிஎம்மில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இரவு நேர ரோந்து பணிகளில் வரும் போது ஏடிஎம் சென்டர்களின் மீதும் பார்வையை வைப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவு நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் வழக்கம் போல போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த ஏடிஎம் ஒன்றில் ஹெல்ப் மீ என்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனைக் கேட்டு ஏடிஎம் மையத்திற்குள் சென்ற போலீசாருக்கு ஒரே அதிர்ச்சி ஏற்பட்டது. நீச்சல் குளத்தில் நின்று கொண்டே நீந்துவதைப் போன்று, உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினின் மேலே இளைஞர் ஒருவர் மாட்டிக் கொண்டு, இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ‘யாருய்யா… நீ… இங்க என்னய்யா பண்றே’ என போலீசார் கேட்க, அதற்கு ‘நஹி சாப்… ஆவோ சாப்’ என தீரன் அதிகாரம் படத்தை போல இந்தியில் பினாத்தியுள்ளான். இதனால், கோபமடைந்த போலீசார் கச்சேரியை தொடங்க முற்பட்ட போது, ‘பணம் எடுக்க வந்தேன்… மெஷினில் மாட்டிக் கொண்டேன்’ எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட போலீசார், ‘பணம் எடுக்க வந்த உனக்கு, மெஷினுக்கு உள்ளே என்ன வேலை’ எனக் கேட்க, பணம் திருட வந்ததைத்தான் சாடைமாடையாக சொல்லியிருக்கிறான் என போலீசார் நகைப்புடன் உறுதி செய்தனர். இந்த சம்பவம் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் போலீசார் பரவச் செய்தனர்.

இதனிடையே, ஏடிஎம் மையத்திற்கு கொள்ளையடிக்க வந்து மாட்டிக் கொண்ட வடமாநில இளைஞர், பீகார் மாநிலம் கிழக்கு சாம்தான் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும், கோழிப்பண்ணையில் பணியாற்றுவதற்காக தமிழகம் வந்ததும் தெரியவந்தது. பின்னர், ஏடிஎம் மெஷினில் இருந்து பத்திரமாக மீட்ட அந்த திருடனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 368

1

0