பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ; நெல்லையில் பதற்றம்..!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 12:39 pm
Quick Share

நெல்லை மாவட்டம் கீழநத்ததில் பஞ்சாயத்து உறுப்பினர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ளார். பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. வீட்டில் உள்ள கால்நடைகளை அப்பகுதியில் இருக்கும் பாலம் அருகே மேய்ச்சலுக்கு விட்டு மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்று கட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதேபோல், இன்றைய தினம் மாலை மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டிற்கு கொண்டு சென்று கட்டுவதற்காக அப்பகுதிப் பாலத்தில் இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ராஜா மணியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், ராஜாமணியின் உறவினர்களும், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். இதனை தொடர்ந்து, நெல்லை தாலுகா போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஊர் பொதுமக்கள் மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகள் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Views: - 329

0

0