புது வகை வைரஸ் அச்சுறுத்தல்: அனைத்து மருத்துவமனைகளும் தயார்:தமிழிசை சௌந்தரராஜன் தகவல்

Author: Udhayakumar Raman
30 November 2021, 9:04 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் புது வகை வைரஸ் எதிர்கொள்ள முழுமையாக திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை 100 % தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜா நகரில் வீடு-வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்ரிக்காவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த 3 பேரை தொடர்ச்சியாக சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் புது வகை வைரஸை எதிர்கொள்ள முழுமையாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும், வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு மாநில எல்லையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும், தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய வகை வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பொது இடங்கள் மற்றும் புதுச்சேரிக்குள் நுழைபவர்கள் 2 தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளார்களா என பரிசோதித்து உள்ள அனுமதிக்கலாமா என்ற ஆலோசனைகளும் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைத்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்படுள்ளதால் பொதுமக்கள் பயமின்றி இருக்கலாம் என்றும் தெரிவித்த அவர், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதியன்று ஒவ்வொரு பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Views: - 264

0

0