தீர்வு கிடைக்காத குப்பை விவகாரம்…? கோவை மாநகராட்சிக்கு எழுந்த சிக்கல்… தானாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை ..!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 10:53 am
Quick Share

கோவையில் சேகாரமாகும் குப்பைகளை முறையாக அகற்றாத விவகாரத்தில் கோவை மாநகராட்சியின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

கோவையில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் இருந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு தினமும் 900 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.

அவ்வாறு அனுப்பப்படும் குப்பைகள் கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. தினமும் அழிக்கப்படும் அளவை விட, அதிகமான குப்பைகள் குவிந்து வருவதால், சொல்லில் அடங்கா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

அதேவேளையில், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்படும் குப்பைகளில் தினமும் 300 டன் குப்பைகள் வரை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் எனப்படும் நுண்ணுயிர் உரம் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உக்கடத்தில் அமைந்துள்ள மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் முறையாக செயல்படாத காரணத்தினால், குப்பைகள் அதிகளவில் சேகாரமாகி வருகின்றன. 2022ம் ஆண்டு குப்பைகளை தரம் பிரித்து அழிக்க வேண்டும் என்று இந்த நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி உத்தரவிட்டிருந்த நிலையில், இயந்திரம் பழுது காரணமாக இந்தப் பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆனால், பல ஆண்டுகளாக குப்பைகளை கையாளுவதில் அனுபவம் கொண்டதாக கோவை மாநகராட்சி கூறும் இந்த ஒப்பந்ததாரர், மாநகராட்சி போன்ற பெரிய அளவிலான பகுதிகளில் குப்பைகளை கையாளும் அனுபவம் கிடையாது என்று கூறப்படுகிறது. அதாவது, பஞ்சாயத்து அளவிலான குப்பைகளை அகற்றும் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படும் நிலையில், கோவை மாநகராட்சி போன்ற பெரிய நகரை எப்படி கையாள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சிக்கு விளக்கம் கேட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தானா முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, உரிய பதில் அளிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Views: - 218

0

0