தலையில் கல்லைப் போட்டு வட மாநில வாலிபர் படுகொலை : குற்றவாளிக்கு போலீஸ் வலை!!

7 May 2021, 3:27 pm
Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடத்தில் வட மாநில தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் எடத்தளாங்காட்டு தோட்டத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது.

இதனை கண்ட அப்பகுதி பொது மக்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் தலையில் கொடூரமாக கல்லை போட்டு சிதைத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டெவில் வரவழைக்கப்பட்டது.

மோப்பநாய் டெவில் கொலையான உடல் அருகே இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பின்னர் கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் உடலை ஆய்வு செய்தனர். இதனை அடுத்து போலீசாரின் மேற்கொண்ட விசாரணையில் கொலையான வாலிபர் அருகில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கூலி தொழிலாளி விஷால் பால் (வயது18) என்பதும் அருகில் உள்ள அறையில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் விஷால் பாலின் சொந்த ஊர் உத்திரபிரதேச மாநிலம் சூரஜ் நகரில் உள்ள அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் என்பதும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.

நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு வெளியில் சென்றவன் காணவில்லை என கூறப்பட்ட நிலையில் காட்டில் தலை நசுங்கிய நிலையில் பிணமாக விஷால் பால் மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 232

0

0