இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்: பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
9 August 2021, 11:48 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின.

இந்த சூழலில் அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்றுமுதல் தொடங்குகின்றன. இந்த அறிவிப்பு முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் நீங்கலாக, மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டால், மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில், கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை பெறவும், விண்ணப்பதாரர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிடவும், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Views: - 515

0

0