இருளில் கேட்ட ‘உர்உர்’ சத்தம்… தடுப்பு கம்பிக்குள் 5 மணிநேரம் சிக்கியிருந்த சிறுத்தை ; ஆக்ஷனில் இறங்கிய வனத்துறை..!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 2:53 pm
Quick Share

உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தடுப்பு கம்பிக்குள் 5 மணி நேரமாக சிக்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று பார்த்தனர்.

இதனை அடுத்து, தடுப்பு வேலி கம்பியில் சிக்கி இருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தும் பணியில் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிறுத்தைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக வனத்துறையினர் சிறுத்தையை எடுத்துச் சென்றனர்.

சிகிச்சைக்கு பின் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சிறுத்தை விடுவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள தனியார் சொந்தமான நிலத்தில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Views: - 273

0

0