சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் வெளி மாவட்ட பக்தர்கள் பங்கேற்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு!!

27 December 2020, 7:02 pm
Chidambaram Temple - Updatenews360
Quick Share

சென்னை : சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்துகொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வருகிற நாளை நடைபெறுகிறது. தங்கத் தேரோட்டத்தை நடத்த 100 நபர்களுக்கும், 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நடராஜமூர்த்தி எழுந்தருளும் பிரதான தேரோட்டத்தை நடத்த ஆயிரம் பேருக்கும், சிவகாமசுந்தரி அம்மன் தேரோட்டத்தை நடத்த 400 நபர்களுக்கும், விநாயகர் தேரோட்டத்தை நடத்த 200 பேருக்கும், சுப்பிரமணியர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும், சண்டிகேஸ்வரர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் 30-ந் தேதி கோவில் வளாகத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள, குறிப்பிட்ட நேர இடைவெளியை ஒதுக்கீடு செய்து, கோவில் வளாகத்தினுள் ஒரே சமயத்தில் 200 நபர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், கொரோனா தடுப்பு தொடர்பாக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதை கோவில் நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆருத்ரா தரிசன மகோத்சவ விழாவில் கலந்து கொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கடலூர் மாவட் ஆட்சியர் தெரிவித்தார்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கொரோனா சூழல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், மத உணர்வை புண்படுத்தும் நோக்கமில்லை என அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வெளிமாவட்ட பக்தர்கள் பங்கேற்க அனுமதியளித்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் அனுமதிக்கல்ம் என்றும், பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Views: - 1

0

0