‘நான் அவர் இல்லை’.. நித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை இடித்த மர்ம கும்பல்… புலம்பும் சாமியார்!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 9:07 pm
Quick Share

நித்யானந்தா என நினைத்து தனது ஆசிரமத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக பல்லடம் காவல்நிலையத்தில் சாமியார் பாஸ்கரானந்தா புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீரென சொகுசுக்காரில் சாமியார் ஒருவர் வந்திறங்கியவுடன் காவல் நிலையமே பரபரப்புக்குள்ளானது. பார்ப்பதற்கு நித்யானந்தா சுவாமிகள் போல் தோற்றமளித்த சாமியார் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தைப் சேர்ந்த இவர், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்க சுமார் 1 அரை கோடி வரை அட்வான்சாக கொடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் மேற்படி இடத்தில் கட்டப்பட்டுவந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா சுவாமிகள் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில் ஆசிரம கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பதாக வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தா சுவாமிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு பக்தர்களுடன் நேரில் வந்து ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஸ்கரானந்தா சுவாமிகள் கூறும் போது :-செல்வகுமார் என்பவரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டு சுமார் ரூபாய் 1 அரை கோடி அட்வான்ஸ் தொகை கொடுத்து பின்னர் ஆசிரமம் கட்ட ஆரம்பித்தோம். கொரோனா தாக்கம் காரணமாக தற்போது மீண்டும் கட்டுமானப்பணிகள் துவங்கி முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி வங்கியில் கடன் பெற்றிருப்பதாக வீட்டின் முன்பு அறிவிப்பை ஒட்டிவிட்டு சம்பந்தமே இல்லாமல் தனது ஆசிரம கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக மர்மநபர்கள் ஆசிரமத்தை இடித்து சேதப்படுத்தி, கருவறையில் வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பற்ற வைர வைடூரியங்களை திருடிச்சென்றுவிட்டனர்.

மேலும் சம்பந்தமே இல்லாமல் தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். தான் சுவாமி நித்யானந்தா போல் இருப்பதால் தன் ஆசிரமம் மீது தாக்குதல்.நடத்தியிருக்கலாம். மேலும், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தான் தற்கொலை செய்துகொள்வேன், என ஆவேசமாக தெரிவித்தார்.

Views: - 835

0

0