கோவையை கட்டுப்பாட்டில் எடுத்த காவல்துறை.. வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் குவிப்பு.. பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!!

Author: Babu Lakshmanan
24 September 2022, 1:03 pm
Quick Share

கோவை : அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வெளிமாவட்டங்களில் இருந்து 1,700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் நேற்று முன்தினம் இரவு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரத்தினபுரி, குனியமுத்தூர், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவங்களைக் கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழ்நாடு கமாண்டோ போலீசார் 50க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கோவை மாநகர போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்திற்கு மூன்று ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பின்னரே, ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா கோவையில் முகமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 438

0

0