புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? செய்தியாளர் தாக்குதல் விவகாரம் ; தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

Author: Babu Lakshmanan
25 January 2024, 1:35 pm
Quick Share

திருப்பூர் அருகே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் செய்திதொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப் பிரபு, வழக்கம் போல செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். நேற்றிரவு அவரது வீட்டை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், நேசபிரபுவை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது..

இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட X தளப்பதிவில், “நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த நேசபிரபு என்பவர் நேற்றிரவு அவரது வீட்டுக்கு அருகில் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களை நேசபிரபு செய்தியாக்கி வந்திருக்கிறார். அது தான் அவர் மீதான தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்த பிறகும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம் ஆகும். நேசபிரபு மீது தாக்குதல் நடத்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” எனக் கூறினார்.

Views: - 219

0

0