‘கையெழுத்து போடலனா காணாம போயிடுவ’: அதிமுக பேரூராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் : இரு திமுக கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
3 January 2023, 1:36 pm
Quick Share

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக பேரூராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. பேரூராட்சியின் சேர்மனாக திமுகவை சேர்ந்த சுஜிதாமேரி உள்ளார். கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சுஜிதா மேரியின் தலைமையில் பேரூராட்சியில் தீர்மான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேரூராட்சியில் அதிக அளவில் முறைகேடு நடப்பதாக கூறி பேரூராட்சி அலுவலரிடம் புகார் அளித்துவிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த 11 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் திமுக சேர்மனின் கணவரும், பத்தாவது வார்டு கவுன்சிலருமான தங்கமாங்கனி என்பவர் இந்திராநகர் பகுதியில் இருக்கும் மம்சாபுரம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ராஜாவின் பெட்ரோல் பங்கிற்கு காரில் சென்று, அதிமுக கவுன்சிலரின் கார் ஓட்டுனரும், பெட்ரோல் பங்கினை நிர்வாகிக்கும் ராமராஜ் என்பவரை சந்தித்துள்ளார்.

அப்போது, உங்க ஓனர் அதிமுக கவுன்சிலர் ராஜா மம்சாபுரம் பேரூராட்சி தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் செய்து, 11 கவுன்சிலர்களை கூப்பிட்டுக் கொண்டு வெளிநடப்பு செய்ததாகவும், தீர்மான நோட்டில் கையெழுத்து போட சொல்லவும், இல்லையேன்றால் காணாமல் ஆக்கிவிடுவோம் என்று அங்கும் இங்கும் கொலைவெறியுடன் நடந்து சென்றுள்ளார்.

அதிமுக கவுன்சிலர் ராஜா, ராமராஜ், முருகானந்தம் ஆகியோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, தனது காருக்கு டீசல் நிரப்ப சொல்லி மிரட்டியும், நிரப்பிய டீசலுக்கு பணம் தராமல் சென்றதாகவும், காருக்குள் 12வது வார்டு திமுக கவுன்சிலர் தேரிப்பழம், மம்சாபுரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடன் இருந்ததாகவும் பெட்ரோல் பங்க்கை நிர்வகிக்கும் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து ராமராஜ் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததன் பேரில் மம்சாபுரம் பேரூராட்சியின் திமுக சேர்மனின் கணவரும், திமுக கவுன்சிலருமான தங்கமாங்கனி மற்றும் அவருடன் இருந்த திமுக கவுன்சிலர் தேரிப்பழம், மம்சாபுரம் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஆகிய மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 400

0

0